Friday, March 27, 2009

விமான நிலைய அவலம்

இது தற்செயலாக நடந்ததா என்று தெரியவில்லை. ஆனால் அரசு இயந்திரம் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று. இன்றைய தீவிரவாதிகள் சைக்கிள் கேப்பில் கப்பல விடுவார்கள்... ஆனால் சென்னை விமான நிலையத்தில் நேற்று நான் கண்ட காட்சிகள் சொல்வது அங்கு ஒரு கப்பல் கேப்பே இருக்கு என்பதைத்தான்..

தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக ஐந்து அடுக்கு பாதுகாப்பு சென்னை விமான நிலையத்துக்கு...அத்தனை அடுக்கும் சீட்டுக்கட்டாக அல்லவே இருக்கிறது. தீவிரவாத அச்சுறுத்தல் இல்லாத காலங்களில் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்புக்கு அதிகாரிகள் கவனமுடன் செயல்பட்டார்கள் என்பது என் கருத்து. நேற்று நடந்தது என்னவென்பதை கீழே படியுங்கள்...

விமான நிலையத்தின் நுழைவாயிலில் இரண்டு காவலர்கள் நின்று நம்மிடம் டிக்கெட் இருக்கிறதா என்று பார்ப்பார்கள். அவர்களை விட்டுவிடலாம்... உள்ளே சென்றால் நமது luggage ஐ X-Ray பரிசோதனைக்கு உட்படுத்துவார்கள் , அப்பொழுது நமது பொருட்கள் ஒரு இயந்திரத்தின் வழியாக செல்லும் போது அதன் நகல் படத்தை இரண்டு காவலர்கள் இருந்து கண்காணிப்பார்கள். சந்தேகத்திக்கு உள்ளான பைகளை திறந்து சோதனையும் நடத்துவார்.. ஆனால் நேற்று அவ்விடங்களில் இருந்த இரு இளம் காவலர்கள் கண்காணிப்பு திரையை விட்டுவிட்டு சிட்டுகள் சிலதை பார்த்து சைட் அடித்துக்கொண்டிருந்தார்கள் ... என் பொருட்களை அவர்கள் கண்காணிக்காமல் இருப்பதை நான் கண்கானித்துக்கொண்டிருந்தேன். மனதுக்குள் சின்ன சங்கடத்துடன் அவ்விடத்தை விட்டு நீங்கி பொருட்களை check in செய்துவிட்டு கைப்பையை மட்டும் எடுத்து முன்னேறினேன்.. விமானத்தில் ஏறும் முன்பு மீண்டு ஒருமுறை நமது கைப்பையை X-Ray சோதனைக்கு உள்ளாக்குவார்கள்..அதும் முடிந்தது (இங்கு என்ன நடந்தது என்று கடைசியில் சொல்கிறேன்)

அடுத்தபடியாக விமானத்தில் ஏறி அமரும்முன் நமது கைப்பை சோதனை செய்யப்பட்டதின் சான்றை (சீல்) பார்க்க ஒரு காவலர் இருப்பார்.. அவர் என் கைப்பையை மட்டுமல்ல யாருடைய கைப்பையையும் பார்க்கவில்லை.. வழக்கம்போல் நொந்துகொண்டு விமானம் ஏறி வந்து சேர்ந்தேன்..வழியெல்லாம் இந்த சோதனை குளறுபடிகள் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.. இவ்வளவு நடந்தும் ஏன் இப்படி அலட்சியமாக இருக்கிறார்கள் என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டேன்... இதையே யோசித்து பலனில்லை என்று வந்த வேலையே பார்க்கலாம் என்று என்று என் கைப்பையை திறந்தால் அதில் நான் மறந்து வைத்திருந்த கூர்மையான "கத்தரிக்கோல்" (முக்கியமான சோதனையான " கைபை எக்ஸ்ரே" வில் இதை கவனிக்கவில்லை நம் காவலர்கள்)...

ஒருகணம் என்னை ஒரு தீவிராதி நிலையில் நிக்கவைத்து சிந்தித்துப்பார்த்தேன்.. நாசங்களை விதைக்க இதை விட யார் வழி விட்டுக்கொடுப்பார்... எனவே இதை கண்டிப்பாக பதிவிட வேண்டும் என்று எண்ணி இப்பொழுது நாடு ராத்திரியில் உக்காந்து எழுதுகிறேன்.. இது மிகவும் அவசியம் என்பதால் அவசரகதியிலேயே எழுதுகிறேன்..தவறுகள் எழுத்துபிழைகளை மன்னிக்கவும்..

என் கருத்துப்படி விமான பாதுகாவலர்கள் தினமும் ஒரே வேலையே பார்ப்பதால் கவனக்குறைவு ஏற்படலாம்.. அதானால் இப்பணிக்கு குறுகிய கால அடிப்படையில் காவலர்களை மாற்றிக்கொண்டே இருக்கலாமே!

Wednesday, March 25, 2009

பெட்ரோலும் தண்ணீரும்


"பூமியின் இதயத்துடிப்பு" பதிவில் பெட்ரோலை கொஞ்சமாக பற்ற வைத்தேன். சரியாய் எரிந்ததா இல்லையா என்று தெரியவில்லை ஆனால் "சற்றும் மனம் தளரா..." மீண்டும் திரி கொளுத்துகிறேன். இது கொஞ்சம் சுவாரஸ்யமான விஷயம் .

தண்ணீருக்காக நம்மூர்ல நடக்கிற கூத்துகளுக்கு அளவே இல்லை அதை பற்றி விவரிக்கவும் தேவை இல்லை. தண்ணி லாரி முதல் காவேரி வரை நாம் அடித்து கொள்வது தண்ணீருக்காக. ஆனால் கோடிகணக்கில் செலவு செய்து தண்ணீரை பூமிக்கடியில் கொண்டு செல்வதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கண்டிப்பாக இது நிலத்தடி நீர் சேகரிப்பு அல்ல. வேறு எதுக்காக? எல்லாம் ஒரு விஷயமாத்தான்..கீழ படிங்க ...

பெட்ரோல் பூமிக்கடியில் இருந்து கிடைக்கிறதென்பது நாம் அறிந்த ஒன்று. இப்படி பூமிக்கடியில் இருக்கும் பெட்ரோல் சில வகையான பாறைகளின் நுண் துளைகளில் காணப்படும். பொதுவாக பெட்ரோல் ஒளிந்திருக்கும் பாறைகளுக்கு மேலாக இருக்கும் பாறைகள் கடினமானதாக இருக்கும். எவ்வளவு கடினம் என்றால் அதிக அழுத்தத்தில் இருக்கும் பெட்ரோல் அதன் இருப்பிடத்தை விட்டு மேலே சென்று மற்ற பாறைகளோடு ஐக்யமாகால் இருக்குமளவுக்கு கடினமானதாக இருக்கும். இந்த அடுக்கை துளைத்து நாம் பெட்ரோல் இருக்கும் பாறையை அடைந்தால்தான் வாழ்க்கை முழுவதும் அதிக அழுத்தத்தில் இருந்த பெட்ரோல் அழுத்தம் குறைந்த பூமியின் மேற்பரப்பை நோக்கி சீறி வரும்(தன் வாழ்கை எரிந்து முடிய போகின்றது என்று தெரியாமலே).

அழுத்தம் என்ற பௌதீக சமாசாரம் இங்கு முக்கியம். திரவங்களும் வாயுவும் அழுத்தம் கூடிய பகுதியிலிருந்து அழுத்தம் குறைந்த பகுதிக்கு பாய வேண்டும் என்பது நியதி. பூமியில் ஆழம் கூடும்போது அழுத்தமும் கூடும் அதனால் தான் பெட்ரோல் நாம் துழைத்த உடனே ஓடி மேலே வருகிறது. இதே காரணத்தால்தான் தான் இருக்கும் பகுதியிலிருந்து கீழேயும் போவதில்லை. பூமிக்கு கீழே பெட்ரோலுக்கு நண்பர்கள் தண்ணீரும் இயற்கை வாயும்தான். அடர்த்தி சமாச்சாரங்களால் பெட்ரோல் தண்ணீருக்கு மேலேதான் இருக்கும் இயற்கை வாயு அங்கு இருக்கும் பட்சத்தில் அது பெட்ரோலுக்கு மேலே இருக்கும். அப்பாடா கிட்டத்தட்ட கிட்ட வந்துட்டேன்.

இனியொரு சமாசாரம் ஒரு பெட்ரோல் வயலில் மொத்தமாக இருக்கும் பெட்ரோலில் 30% வெளியே எடுக்க முடியும். ஏனென்றால் நாம் பெட்ரோல் எடுக்க எடுக்க பூமிக்கடியில் பெட்ரோல் மீதான அழுத்தம் குறைந்து வரும், இதனால் உற்பத்தியும் குறைந்து வரும். இங்குதான் நாம தண்ணி காட்றோம். ஆமா வேறொரு குழாய் மூலமாக பெட்ரோல் வயலின் வேறொரு இடத்தில் பூமியின் மேற்பரப்பில் இருந்து தண்ணீர் அதிக அழுத்ததில் உட்செலுத்தப்படும். இந்த தண்ணீர் கீழே சென்று பெட்ரோலை மேல் நோக்கி தள்ள "ஆப்பு ஏல ஐலசா" ஸ்டைலில் பெட்ரோல் மேலே ஏறி வரும். இது பெட்ரோலுக்கு ஊடு கொடுப்பது மட்டுமல்ல பெட்ரோல் காலி செய்த இடத்தை அடைத்து கொண்டு வெற்றிடம் உருவாகாமலும் அதனால் பெட்ரோல் வயலுக்கு சேதாரம் இல்லாமலும் பார்த்துக்கொள்ளும்.


ஏதோ ஒரு ரஷ்ய மூலையில் உதித்த இந்த ஐடியாவால் இன்று 30% மேலாக பெட்ரோலை எடுக்க முடிகிறது. இப்படியாக பூமியுடனும் நாம் பண்ட மாற்று செய்ய வேண்டி இருக்கிறது.

டிஸ்கி:
1. இங்கு பெட்ரோல் என்று குறிப்பிட்டது ஒட்டுமொத்த பெட்ரோலியத்தை குறிக்கும்.
2. உட்செலுத்தப்படும் தண்ணீர் குடிநீர் அல்ல.

Saturday, March 21, 2009

பூமியின் இதயத்துடிப்பு

இணையத்தில் உலா வரும் பல பதிவுகளை பார்த்துவிட்டு நாமும் ஏன் எழுதக்கூடாது என்று தோன்றியதன் விளைவுதான் "திறந்தமனம்". ஆனால் இயந்திர வாழ்க்கையில் பழுதாகிவரும் என் கால அட்டவணை என்னை அவ்வளவாக அனுமதிக்கவில்லை.

முகம் பார்த்திராத அன்பர் ஒருவர் என் தொழில் குறித்த குறிப்பு நன்றாக உள்ளதென்றும் விளக்கமாக எழுதினால் நன்றாக இருக்குமென்றும் குறிப்பிட்டதால் இந்த பதிவை பூமியின் இதயத்துடிப்பின் விளக்கமாக்குகிறேன்.

பெட்ரோல் டீசல் விலை ஏறும்போதெல்லாம் கடையடைப்பு, முழு அடைப்பு, லாரி ஸ்ட்ரைக் என்று எக்கச்சக்க இன்னல்கள். அரசியல்வாதிகள் பரஸ்பரம் சாக்கடை தெளித்து அறிக்கை அலங்கோலங்கள் விடுவதை நாம் பேப்பரில் பார்த்து நம்மால் ஆனா வசை மொழியை பகிர்ந்தளித்துவிட்டு வேலையை பார்ப்போம்... ஆனால் நம்மில் யாராவது அந்த பெட்ரோல்/டீசல் எங்கிருந்து வருகிறது ? அதை எப்படி கண்டுபிடிக்கிறார்கள்? என்று சிந்திப்பதுண்டா? சைக்கிளுக்கு பெட்ரோல் தேவையில்லை என்பதால் இது போன்ற சிந்தைகள் எனக்கும் வந்ததில்லை (இந்த தொழிலுக்கு வருவேன் என்று இதைப்படிக்கும்போது கூட கனவு கண்டதில்லை :).

கண்டிப்பாக பெட்ரோல் பூமிக்கு அடியில்தான் இருக்கிறது....மரத்திலோ செடியிலோ கிடைப்பதில்லை. பூமிக்கு அடியிலிருக்கும் இதை எப்படி அறிவது? எங்கென்று போய் தேடுவது? இதற்கு விளக்கமாக எழுத வேண்டுமானால் நான் நாள் கணக்கில் எழுதவேண்டும்...அதனால் சுருங்க சொல்லி விளக்க முயற்சி செய்கிறேன்.

பெட்ரோல் கண்டுபிடித்த நாளிலிருந்து சில பல கண்டுபிடிப்பு முறைகள் இருந்து வந்தன .... அதில் பலதும் துல்லியமற்றவை. இந்தநிலையில் தான் பனிப்போர் நமக்கு துணையாக வந்தது.. அமெரிக்காவும் சோவியத் யூனியனும் பரஸ்பரம் "அணுசோதனை" சம்பந்தமான உளவு வேலைகளுக்காக புதிய அறிவியல் முறைகளை பின்பற்றலானார்கள், அதில் பிறந்ததுதான் "seismic methods". இந்த தொழில்நுட்பம் உலகில் எங்கு அணுசோதனை நடந்தாலும் இவர்களுக்கு காட்டிகொடுதுவிடும்... இதன் தியரி மிகவும் எளிமையானது..பூமியில் நிகழும் அதிர்வுகளை பதிவு செய்து அதை ஆராய்ந்தால் அதிர்வின் ஆரம்ப இடம் அதன் அளவு எல்லாம் கண்டுபிடித்துவிடலாம்...இந்த பயன்பாட்டின் தொடர்ச்சிதான் பூகம்பத்தின் அளவையும் இடத்தையும் துல்லியமாக கணக்கிடும் கருவி ..மற்றும் பெட்ரோலியம் கண்டு பிடிக்கும் முறைகளின் வளர்ச்சியும்.

இதை சற்று வேறு மாதிரியாக விளக்க முயற்சிக்கிறேன்.... அதிர்வுதான் அல்லது ஒலிதான் இங்கு மூலப்பொருள்... ஒலி கடந்து செல்ல கண்டிப்பாக ஒரு ஊடகம் வேண்டும். ஒலி என்பது அது கடந்து செல்லும் ஊடகங்களின் அதிர்வே அன்றி வேறில்லை. இதனால் தான் ஒலி அது கடந்து செல்லும் ஊடகங்களை பொருத்து மாறுகிறது. புல்லாங்குழலில் இருந்து வீணையின் ஓசை வருவதில்லை.

எப்படி புல்லாங்குழலுக்கு ஒரு ஓசை வீணைக்கு ஒரு ஓசையோ அதேபோல பூமியின் பல அடுக்குகளும் (பூமியின் அடுக்ககளை பற்றி பல பதிவுகள் போடலாம்) பலவிதமாக ஓசையை தரும்.. அதாவது நாம் பூமியின் பரப்பில் இருந்து நாம் அனுப்பும் ஓசையானது பூமியின் பல அடுக்குகளில் தட்டி எதிரொலிக்கும்போது பல மாதிரியான எதிரொலிகள் கிளம்புகின்றன...இதையெல்லாம் பதிவு செய்து ஆராய முடியும்... இந்த முறையில் தான் தற்பொழுது எல்லா இடங்களிலும் பெட்ரோலியத்துக்கான தேடுதல் வேட்டை நடை பெறுகிறது.. அதெப்படி பூமியின் எதிரொலியை வைத்து பெட்ரோல் கண்டுபிடிக்கலாம் என்று நீங்கள் கேட்கலாம் ..உதாரணத்துக்கு ஒரு பாத்திரத்தில் கரண்டியை வைத்து தட்டி ஒலி எழுப்பி பாருங்கள் .. பிறகு அதே பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி மீண்டும் ஒலி எழுப்பி பாருங்கள்.. இரண்டும் வித்தியாசமாக இருக்கும்... ஒலியின் இந்த பௌதீக தன்மை தான் பூமியில் ஒளிந்திருக்கும் பெட்ரோலையும் காட்டிக்கொடுக்கிறது.

இதை கதை மாதிரி சொல்லிவிடலாம் , ஆனால் நடைமுறை மிக சிக்கலானது . மட்டுமல்ல மிகுந்த பொருட்செலவும் உள்ளது இதற்கு. கடலில் கப்பலின் பின் புறமாக ஓசை எழுப்பும் இயந்திரத்தையும் அதற்குப் பின்னாடி வரிசை வரிசையாக ஒலியை பதிவு செய்யும் இயந்திரங்களையும் இட்டு இழுத்து செல்வர். முன்னது ஓசை எழுப்ப பின்னவை எதிரொலிகளை பதிவுசெய்து கப்பலுக்கு அனுப்பும். அப்படி பதிவு செய்யும் எதிரொலிகளை அடித்து துவைத்து காயப்போட்டு பக்குவப்படுத்தி நவீன கணினிகளின் உதவியோடும் பல்வேறு உத்திகளின் உதவியோடும் ஆராய்ந்து பெட்ரோல் இருப்பதற்கான சாத்யகூறுகள் நிறைய உள்ள இடத்தை தேர்வு செய்து கொடுப்பர். அங்கே சென்று குழாயிட்டு பெட்ரோலை உறிஞ்சி சந்தைக்கு கொண்டு வரலாம். (அமெரிக்க அண்ணன் சமயம் பார்த்து அந்த ஊருக்கு பேரழிவு ஆயுதங்களை தேடியும் வரலாம்..ஜாக்கிரதை).

இத்தனையும் படித்துவிட்டு ஏதாவது புரிந்தால் தெரியப்படுத்தவும்..இதில் நான் தாவி வந்த சில விஷயங்களை விரிவாக எழுத முயற்சிக்கிறேன்... ஒண்ணுமே புரியவில்லை என்றாலும் சொல்லுங்கள்..இது போன்ற முயற்சிகளை கொஞ்சம் தள்ளிப்போடு விடுகிறேன்.. இதில் சின்ன கவலை ஒன்று உண்டு...நம் அரசாங்க பாடத்திட்டத்தில் இதைப்பற்றிய சிறு குறிப்பு கூட தருவதில்லை.. பள்ளி மாணவர்கள் (கல்லூரி மாணவர்கள் கூட) இது போன்ற துறைகள் இருப்பதையும் அதன் மகத்துவத்தையும் அறிந்திருப்பதில்லை. ஒரு கொசுறாக இதை(இந்த கட்டுரையை அல்ல) எங்காவது சேர்க்கலாம் என்பது என் உயரிய கருத்து.