Saturday, March 21, 2009

பூமியின் இதயத்துடிப்பு

இணையத்தில் உலா வரும் பல பதிவுகளை பார்த்துவிட்டு நாமும் ஏன் எழுதக்கூடாது என்று தோன்றியதன் விளைவுதான் "திறந்தமனம்". ஆனால் இயந்திர வாழ்க்கையில் பழுதாகிவரும் என் கால அட்டவணை என்னை அவ்வளவாக அனுமதிக்கவில்லை.

முகம் பார்த்திராத அன்பர் ஒருவர் என் தொழில் குறித்த குறிப்பு நன்றாக உள்ளதென்றும் விளக்கமாக எழுதினால் நன்றாக இருக்குமென்றும் குறிப்பிட்டதால் இந்த பதிவை பூமியின் இதயத்துடிப்பின் விளக்கமாக்குகிறேன்.

பெட்ரோல் டீசல் விலை ஏறும்போதெல்லாம் கடையடைப்பு, முழு அடைப்பு, லாரி ஸ்ட்ரைக் என்று எக்கச்சக்க இன்னல்கள். அரசியல்வாதிகள் பரஸ்பரம் சாக்கடை தெளித்து அறிக்கை அலங்கோலங்கள் விடுவதை நாம் பேப்பரில் பார்த்து நம்மால் ஆனா வசை மொழியை பகிர்ந்தளித்துவிட்டு வேலையை பார்ப்போம்... ஆனால் நம்மில் யாராவது அந்த பெட்ரோல்/டீசல் எங்கிருந்து வருகிறது ? அதை எப்படி கண்டுபிடிக்கிறார்கள்? என்று சிந்திப்பதுண்டா? சைக்கிளுக்கு பெட்ரோல் தேவையில்லை என்பதால் இது போன்ற சிந்தைகள் எனக்கும் வந்ததில்லை (இந்த தொழிலுக்கு வருவேன் என்று இதைப்படிக்கும்போது கூட கனவு கண்டதில்லை :).

கண்டிப்பாக பெட்ரோல் பூமிக்கு அடியில்தான் இருக்கிறது....மரத்திலோ செடியிலோ கிடைப்பதில்லை. பூமிக்கு அடியிலிருக்கும் இதை எப்படி அறிவது? எங்கென்று போய் தேடுவது? இதற்கு விளக்கமாக எழுத வேண்டுமானால் நான் நாள் கணக்கில் எழுதவேண்டும்...அதனால் சுருங்க சொல்லி விளக்க முயற்சி செய்கிறேன்.

பெட்ரோல் கண்டுபிடித்த நாளிலிருந்து சில பல கண்டுபிடிப்பு முறைகள் இருந்து வந்தன .... அதில் பலதும் துல்லியமற்றவை. இந்தநிலையில் தான் பனிப்போர் நமக்கு துணையாக வந்தது.. அமெரிக்காவும் சோவியத் யூனியனும் பரஸ்பரம் "அணுசோதனை" சம்பந்தமான உளவு வேலைகளுக்காக புதிய அறிவியல் முறைகளை பின்பற்றலானார்கள், அதில் பிறந்ததுதான் "seismic methods". இந்த தொழில்நுட்பம் உலகில் எங்கு அணுசோதனை நடந்தாலும் இவர்களுக்கு காட்டிகொடுதுவிடும்... இதன் தியரி மிகவும் எளிமையானது..பூமியில் நிகழும் அதிர்வுகளை பதிவு செய்து அதை ஆராய்ந்தால் அதிர்வின் ஆரம்ப இடம் அதன் அளவு எல்லாம் கண்டுபிடித்துவிடலாம்...இந்த பயன்பாட்டின் தொடர்ச்சிதான் பூகம்பத்தின் அளவையும் இடத்தையும் துல்லியமாக கணக்கிடும் கருவி ..மற்றும் பெட்ரோலியம் கண்டு பிடிக்கும் முறைகளின் வளர்ச்சியும்.

இதை சற்று வேறு மாதிரியாக விளக்க முயற்சிக்கிறேன்.... அதிர்வுதான் அல்லது ஒலிதான் இங்கு மூலப்பொருள்... ஒலி கடந்து செல்ல கண்டிப்பாக ஒரு ஊடகம் வேண்டும். ஒலி என்பது அது கடந்து செல்லும் ஊடகங்களின் அதிர்வே அன்றி வேறில்லை. இதனால் தான் ஒலி அது கடந்து செல்லும் ஊடகங்களை பொருத்து மாறுகிறது. புல்லாங்குழலில் இருந்து வீணையின் ஓசை வருவதில்லை.

எப்படி புல்லாங்குழலுக்கு ஒரு ஓசை வீணைக்கு ஒரு ஓசையோ அதேபோல பூமியின் பல அடுக்குகளும் (பூமியின் அடுக்ககளை பற்றி பல பதிவுகள் போடலாம்) பலவிதமாக ஓசையை தரும்.. அதாவது நாம் பூமியின் பரப்பில் இருந்து நாம் அனுப்பும் ஓசையானது பூமியின் பல அடுக்குகளில் தட்டி எதிரொலிக்கும்போது பல மாதிரியான எதிரொலிகள் கிளம்புகின்றன...இதையெல்லாம் பதிவு செய்து ஆராய முடியும்... இந்த முறையில் தான் தற்பொழுது எல்லா இடங்களிலும் பெட்ரோலியத்துக்கான தேடுதல் வேட்டை நடை பெறுகிறது.. அதெப்படி பூமியின் எதிரொலியை வைத்து பெட்ரோல் கண்டுபிடிக்கலாம் என்று நீங்கள் கேட்கலாம் ..உதாரணத்துக்கு ஒரு பாத்திரத்தில் கரண்டியை வைத்து தட்டி ஒலி எழுப்பி பாருங்கள் .. பிறகு அதே பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி மீண்டும் ஒலி எழுப்பி பாருங்கள்.. இரண்டும் வித்தியாசமாக இருக்கும்... ஒலியின் இந்த பௌதீக தன்மை தான் பூமியில் ஒளிந்திருக்கும் பெட்ரோலையும் காட்டிக்கொடுக்கிறது.

இதை கதை மாதிரி சொல்லிவிடலாம் , ஆனால் நடைமுறை மிக சிக்கலானது . மட்டுமல்ல மிகுந்த பொருட்செலவும் உள்ளது இதற்கு. கடலில் கப்பலின் பின் புறமாக ஓசை எழுப்பும் இயந்திரத்தையும் அதற்குப் பின்னாடி வரிசை வரிசையாக ஒலியை பதிவு செய்யும் இயந்திரங்களையும் இட்டு இழுத்து செல்வர். முன்னது ஓசை எழுப்ப பின்னவை எதிரொலிகளை பதிவுசெய்து கப்பலுக்கு அனுப்பும். அப்படி பதிவு செய்யும் எதிரொலிகளை அடித்து துவைத்து காயப்போட்டு பக்குவப்படுத்தி நவீன கணினிகளின் உதவியோடும் பல்வேறு உத்திகளின் உதவியோடும் ஆராய்ந்து பெட்ரோல் இருப்பதற்கான சாத்யகூறுகள் நிறைய உள்ள இடத்தை தேர்வு செய்து கொடுப்பர். அங்கே சென்று குழாயிட்டு பெட்ரோலை உறிஞ்சி சந்தைக்கு கொண்டு வரலாம். (அமெரிக்க அண்ணன் சமயம் பார்த்து அந்த ஊருக்கு பேரழிவு ஆயுதங்களை தேடியும் வரலாம்..ஜாக்கிரதை).

இத்தனையும் படித்துவிட்டு ஏதாவது புரிந்தால் தெரியப்படுத்தவும்..இதில் நான் தாவி வந்த சில விஷயங்களை விரிவாக எழுத முயற்சிக்கிறேன்... ஒண்ணுமே புரியவில்லை என்றாலும் சொல்லுங்கள்..இது போன்ற முயற்சிகளை கொஞ்சம் தள்ளிப்போடு விடுகிறேன்.. இதில் சின்ன கவலை ஒன்று உண்டு...நம் அரசாங்க பாடத்திட்டத்தில் இதைப்பற்றிய சிறு குறிப்பு கூட தருவதில்லை.. பள்ளி மாணவர்கள் (கல்லூரி மாணவர்கள் கூட) இது போன்ற துறைகள் இருப்பதையும் அதன் மகத்துவத்தையும் அறிந்திருப்பதில்லை. ஒரு கொசுறாக இதை(இந்த கட்டுரையை அல்ல) எங்காவது சேர்க்கலாம் என்பது என் உயரிய கருத்து.

5 comments:

  1. please continue these kind of topics.really unknown and usefull..nandri

    ReplyDelete
  2. எனக்கு தீராத சந்தேகம் ஒன்று...
    இப்படி எடுக்கும் பெட்ரோல் இருக்கும் பகுதிக்கு நீர் வந்து சேர்ந்துவிடும் அப்போது நீரின் அடர்த்தி முதலில் இருந்த பெட்ரோலின் அடர்த்தியில் இருந்து வேறுபடும் என்பதால் அந்த பகுதி சற்றி இளகி அதன் மேல் இருக்கும் பகுதி கீழே விழாதா?

    ReplyDelete
  3. தண்டோரா..வருகைக்கு நன்றி.
    வடுவூர் குமார்.. உங்களுக்கு புதிய பதிவில் பதில் இருக்கிறது..புது ஐடியா தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  4. எளிமையான மொழியில் விளக்கத்துவங்கியதற்கு (இதை தொடருவீர்கள் என நினைக்கிறேன்) மிக மிக நன்றி :-)

    இதையெல்லாம் எப்படி கண்டுபிடிப்பார்கள் என யோசித்துகூட பார்த்திராத நிலமைதான் எனக்கெல்லாம்.. இப்போவே இப்படியென்றால் பள்ளி கல்லூரியில் யோசித்துப்பார்தேன்.. அதுவும் டவுனில் இருந்தபோதிலும் இப்படியென்றால் கிராமங்களில் இருக்கும் மாணவர்களின் நிலமை இன்னும் பரிதாபம் :-(

    >> நம் அரசாங்க பாடத்திட்டத்தில் இதைப்பற்றிய சிறு குறிப்பு கூட தருவதில்லை.. பள்ளி மாணவர்கள் (கல்லூரி மாணவர்கள் கூட) இது போன்ற துறைகள் இருப்பதையும் அதன் மகத்துவத்தையும் அறிந்திருப்பதில்லை. <<<

    எனக்கிருக்கும் பலநாள் வருத்தம் இது :-( , கல்லூரி படிப்பை தேர்ந்தெடுக்க அண்ணாயுனிவர்சிட்டி வந்திருந்தபொழுது Geo.... என ஒரு கோர்ஸ் இருந்தது, ஆர்வமாய் அது என்ன என ஆராய முற்பட்டபோது அதெல்லாம் வேணாம்ப்பா, ஒத்துவராது என்ற முட்டுக்கட்டைகள்தான் சாதாரணமாய் தென்படுகின்றது :-(

    உங்கள் கட்டுரைகள் தொடர்ந்து வரவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்..

    ReplyDelete
  5. really useful. i expect more like this from u

    ReplyDelete